“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”
சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.
டெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.
‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.
ஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.
தொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.
இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.
உலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.
அதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.
மாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.
‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.
கொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.
மனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.
மரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.
இந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.
தானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.
அப்படியென்றால் தீயவர்கள்?
அவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.
மரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.
அதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.
உலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.
மற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.
சொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.
மனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.
இதுதான் யதார்த்தம்.
பிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.
நம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.
சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம்.
அறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.