பொதுவாக சொற்பொழிவு என்று கருதப்படும் ஒன்றாகவோ, அல்லது, குறிப்பிட்ட துறையைப் பற்றி விளக்கிச் சொல்லும் பிரசாங்கமாகவோ இந்த நிகழ்ச்சி இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். உங்களுக்கும் பேச்சாளராகிய எனக்கும் இடையே நிகழும் உரையாடல் இது. குறிப்பிட்ட ஒன்றை பற்றிய விளக்கங்களை நான் உங்களுக்கு அறிவுறுத்தவோ அல்லது உங்கள் சிந்தனையை அல்லது அபிப்ராயங்களை உருவமைத்து நெறிப்படுத்தி செல்வதாகவோ இவ்வுரையாடல்கள் இருக்கப் போவதில்லை. ஒரு பூங்காவில் அங்கிருக்கும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு பிரச்சனைகளை அலசி ஆராயும் நண்பர்களை போல, நாமும் கலந்துரையாடப்போகிறோம் என்பதை இக்கலந்துரையாடல் தொடர் முழுவதற்கும் நினைவில் பதித்துக் கொள்ளவும்.
உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலவரங்கள், குழப்பங்கள், அராஜகம் பற்றி, உலக நலனில் தீவிர அக்கறை கொண்டுள்ள நண்பர்களாகிய நாம் இப்போது கலந்துரையாடலாம்.
உலகத்தில் நம்மைச் சுற்றி என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம். இந்தியன், ஜெர்மானியன், ஆங்கிலேயன், அமெரிக்கன், ரஷியன் என்பது போன்ற பாகுபாடுகளை மனதில் கொண்டிராமல், எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் உலக நிகழ்வுகளைப் பார்க்கலாம். எந்த நாட்டைச் சேர்ந்தவராய் இருந்தால் என்ன, நாம் அனைவரும் மனிதகுலமே. மிகுந்த கலக்கத்தையும், குழப்பத்தையும் எதிர்கொள்ளும் நாம், மிகவும் பயங்கரமான உலகத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மனம் குழம்பி போய் இருக்கும்போது, நாம் பாதுகாப்பிற்காக எதாவது ஒன்றை நாடிச் செல்கிறோம். இந்தியா மாபெரும் குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிலும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. மக்கள் திக்கு தெரியாமல் திகைத்து போயிருக்கிறார்கள்.
குழப்பம், நம்பிக்கையற்ற நிலை, பாதுகாப்பின்மை போன்ற உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படும்போது, பாரம்பரியத்தின் பக்கம் திரும்பி, கடந்த கால அனுபவங்களிலிருந்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்று தேடுகிறோம். உலகம் முழுவதும் இவ்வகை செயல்பாடுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விவிலியத்தை பிரமாணமாகக் கொண்டுள்ள அடிப்படை வாதிகள் இருக்கின்றனர். குரானை பிரமாணமாகக் கொள்ளும் அடிப்படைவாதிகளும் உள்ளனர். மார்க்ஸ்ஸை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை வாதிகளும் உள்ளனர். ஆக, நாம் பெரிதும் குழம்பிப்போய் இருக்கும்போது, ஒரு வகையான அதிகாரத்திற்கு, ஒரு வகை நூல்களுக்கு, மற்றும், கடந்த கால அனுபவங்களுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டு குழப்பத்தில் இருந்து மேலும் வழியை காண முயல்கிறோம்.
நமக்கிருக்கும் இந்த குழப்பத்திற்கான மூலக்காரணம் எது? காரணம் ஒன்றிருந்தால், அதற்கு முடிவு என்ற ஒன்றிருக்கும். மூலக்காரணத்தை கண்டுபிடித்து விட்டால் ஒன்றை முடிவிற்கு கொண்டு வந்து விடலாம். எனவே நாம் வினவுகிறோம்: இந்த குழப்பம் இந்த நாணயமற்ற தன்மை இந்த சீர்குலைவு ஆகியவற்றிக்கு காரணம் எது?
அடுத்த பதிவில்…
A D Baalan
Editor – Kallakurichi Guide
‘”குழப்பம், நம்பிக்கையற்ற நிலை, பாதுகாப்பின்மை போன்ற உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படும்போது, பாரம்பரியத்தின் பக்கம் திரும்பி, கடந்த கால அனுபவங்களிலிருந்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்று தேடுகிறோம். உலகம் முழுவதும் இவ்வகை செயல்பாடுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது'”