எண்ணம் என்றால் என்ன? JK

JK 3-Kallakurichi Guide
            எண்ணம் என்றால் என்ன? எண்ணத்தின் தோற்றுவாய் எது? மனிதன் ஏன் எண்ணத்தை சார்ந்து இருக்கிறான்? எழுதப்பட்ட அனைத்து நூல்களும் அது பைபிளாக இருக்கட்டும், இல்லை, குரானாக இருக்கட்டும், இல்லையென்றால் உபநிடதமாக இருக்கட்டும், எல்லா நூல்களுமே எண்ணத்தை அடிப்படையாக கொண்டவைதான். எண்ணத்தின் ஆதரவோடு வாழ்கிறோமே, அந்த எண்ணம் என்றால் என்ன? நான் இதற்கான பதிலை சொல்லப்போகிறேன் என்று தயவு செய்து காத்திருக்காதீர்கள். பிறரிடமிருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருந்தீர்களென்றால், நீங்கள் பயனற்ற நபர் என்றாகிவிடும்.
      விஷய அறிவு இல்லாத எண்ணம் என்று ஏதேனும் உண்டா? விஷய அறிவு என்றால் என்ன?  உண்மையில் பலவகைப்பட்ட விஷய அறிவு உள்ளன. அவற்றில் இரண்டை மட்டும் இப்போது நாம் பார்க்கலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்று படிப்பதால் கிடைக்கும் விஷய அறிவு, மற்றும், வேலை தெரிந்தவரிடம் உதவியாளராகச்  சேர்ந்து அவரிடம் கற்றுக்கொண்டு  வளர்த்துக்கொள்ளும் திறமை என்று விஷய அறிவை நாளடைவில் நாம் சேகரித்துக்கொள்கிறோம். நான் தச்சராக விரும்பினால், மரத்தின் தர நிர்ணயம் மற்றும் உபயோகப்படுத்த வேண்டிய உபகரணங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம்  நான் கற்றுக்கொள்ள வேண்டும், பல நுணுக்கங்களை கற்றுத்தெரிந்து, விஷய அறிவை பெருக்கிக்கொண்டும்,   சேகரித்துக்கொண்டும் இருக்கவேண்டும். நான் விஞ்ஞானியாக வேண்டுமென்றால், மிக அதிக அளவில் அறிவியல் ஞானம் பெற்றிருக்க வேண்டும், விஷய அறிவு, அனுபவத்தின் மூலம் கிடைக்கிறது. விஞ்ஞானி ஒருவரின் கண்டுபிடிப்பை, மற்றொரு விஞ்ஞானி சோதித்து, அதை மேலும் மெருகூட்டுகிறார் அல்லது அதிலிருந்து சிலவற்றை நீக்கிவிடுகிறார். ஆக, விஷய அறிவு, காலப்போக்கில் படிப்படியாக கூடிக்கொண்டே போகிறது.
      இப்போது நாம் வினவுவது: விஷய அறிவு, முழுமையானதா, இல்லை, அது எப்போதுமே வரையறைக்குட்பட்டதா? இந்தக்  கேள்வியை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். விஷய அறிவிலிருந்து பிறந்த மானுடச்சிந்தனை, பூரணத்துவம் கொண்டதாக, முழுமையானதாக இருப்பது சாத்தியமாகுமா? கட்டாயம் சாத்தியமாகாது. எதைப்பற்றிய விஷய அறிவும் முழுமையானதல்ல. எனவே, விஷய அறிவு எப்பொழுதுமே வரையறைக்குட்பட்டதே. பகவத்கீதை, உபநிடதங்கள், பைபிள் ஆகியவையெல்லாமே விஷய  அறிவுதான், எழுதப்பட்ட சிந்தனைகள்தாம்.
புனிதத்துறவியிடமிருந்து பெற்றதோ, அரசியல்வாதியிடமிருந்து பெற்றதோ எதுவாயினும், விஷய அறிவு வரம்பிட்குட்பட்டதே. எனவே, விஷய அறிவைப்  போற்றித் துதிக்காதீர்கள். வரம்பிட்குட்பட்ட விஷய அறிவு எப்போதுமே அறியாமையுடன் கூடி  வாழ்கிறது.
      விஷய அறிவிலிருந்து  பிறந்தது எண்ணம். உதாரணத்திற்கு, நான் ஒரு விபத்தில் சிக்கி, வேதனையை அனுபவித்தேன். இந்த அனுபவம், என் மூலையில் பதிவாகிறது. ஞாபகம் என்பதாக பதிவாகியுள்ள அந்த அனுபவம், பின்னணியில் இருந்துகொண்டு, அடுத்த முறை நான் காரோட்டும்போது, கவனத்துடன் இருக்க வைக்கிறது. அதாவது, அனுபவம் ஏற்படுகிறது. அந்த அனுபவத்திலிருந்து கிடைத்த விஷய அறிவு ஞாபகம் என்பதாக மூலையில் சேமிக்கப்படுகிறது. ஞாபகங்களிருந்து எண்ணம் பிறக்கிறது. மனபதிவுகளே உங்களுக்கு இல்லையென்றால், என்ன நேரிடும்? நினைவுத்திறன் இழந்த நிலையில் இருப்பீர்கள். மிக உயர்ந்த உன்னதமான எண்ணம் என்றோ, இழிவான எண்ணம் என்றோ ஏதுமில்லை. எண்ணம் வரையறுக்கப்பட்டதாய் இருப்பதால், அதன் செயல்பாடுகளால், மனித உறவில் முரண்பாடுகள் கட்டாயம் உண்டாகும்.
       எண்ணத்தின் சிக்கலான கூறுகளைப்  பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா? அதன் எளிதில் வயப்படும் தன்மை  பற்றி நீங்கள் அறிவீர்களா? எண்ணத்தின் அசாதாரணமான ஆற்றலைப் பற்றியும் குறிப்பிட்ட ஒரு வழியில் பயணிக்கக்கூடிய அதன் வேகத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரியுமா? தொழில்நுட்பத்துறையில் எண்ணத்தின் சாதனைகளைப்  பாருங்கள். இயக்க விசையை மின்சாரமாக மாற்றும் டைனமோ, இயந்திரத்தின் பாகங்களை இயக்கும் பிஸ்டன், ஜெட் விமானம் என்று பிரமிக்க வைக்கும் எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை உருவாக்கி, முன்னேற்றம் கண்டு வருகிறோம். இம்முன்னேற்றத்திற்கு ஒரு காரணியாக, நம் அதிகார வெறி, ஒருவரையொருவர் வெல்ல விரும்பும் நம் கொலைவெறியாக இருக்கலாம். எனவே எண்ணம், யுத்தங்களை மூட்டி விட்டது, போர்த்தடவாளங்களை உருவமைத்தது.  சுகாதாரம், ஆரோக்கியம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் அருமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கி நம் வாழ்வில் வளம் கூட்டியதும் எண்ணம்தான். ஆனால் எண்ணம் நமக்குப்  பல பிரச்னைகளையும் அளித்திருக்கிறது.
       நாம் செயல்பட, நம்மிடம் இருக்கும் ஒரே கருவியாக, எண்ணம் மட்டும்தான் உள்ளதா? எண்ணம் எனும் அக்கருவி, மழுங்கிப்போய், பிரச்சனைகளை உருவாக்குகிறது. எண்ணம் தோற்றுவித்தப் பிரச்சனைகளை, எண்ணத்தைக்கொண்டே தீர்க்கப் பார்ப்பதால், மேலும் மேலும் பிரச்சனைகள் எழுகின்றன. ஆகவே, நம் கேட்கிறோம்: எண்ணம் இல்லாத, வேறு வகைப்பட்ட கருவி ஏதேனும் உள்ளதா?
       எண்ணம் வரையறைக்குட்பட்டது, முழுமையற்றது. என்னுடைய எண்ணம் என்றோ, உங்கள் எண்ணம் என்றோ ஏதுமில்லை; அது எண்ணம், அவ்வளவே. எண்ணம் என்பது தனிநபர் எண்ணுதல் அல்ல;  நீங்கள் பெரும் பணக்காரரோ, இல்லை, புலமைமிக்கவரோ அல்லது எழுதபடிக்கத் தெரியாத ஏழை  கிராமவாசியோ, எவராயிருப்பினும், எண்ணமிடுகிறீர்கள், எண்ணுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை நிலை எதுவாயிருப்பினும் உங்கள் வாழ்க்கை சீர்கெட்டிருப்பதை உங்களால் பார்க்க முடிகிறது. அரசியல் தலைவராகவோ அல்லது ஆன்மிகத் தலைவராகவோ, உலகின் மிகப்பெரிய அதிகாரத்தைப் பெற்றவராகவோ நீங்கள் இருக்கலாம். ஆனால், உள்முகத்தில், நீங்கள் ஒழுங்கற்று இருக்கிறீர்கள்.
         உள்முக  ஒழுங்கின்மையின் காரணமாக, வெளியில் உங்கள் ஸ்பரிசம் படும் இடமெல்லாம், ஒழுங்கீனம் பரவுகிறது. நாடு முழுவதும் சீர்கெட்டிருப்பதைப்  பார்க்கிறீர்கள். ஆசை, எண்ணம் மற்றும் காலம் ஆகியவவை, சீர்கேட்டின் காரணிகளாக உள்ளன. ஒழுங்கைக்  கொண்டுவர, எண்ணத்தை பயன்படுத்தினீர்கள் என்றால், நீங்கள் திரும்பவும் ஒழுங்கீனத்தைத் கொண்டு வருவீர்கள். இந்த  உண்மை புரிகிறதா?
      நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டின்  அடிப்படையில்தான் உள்ளது. ராணுவ வீரர்களை நாள்தோறும் கடுமையான பயிற்சி செய்யவைத்து ஒழுங்குமுறைக்குட்படுத்துவது போலவே, நாமும் நம்மை ஒன்றை செய்வதற்கும், மற்றொன்றை செய்யாமலிருப்பதற்கும் கட்டுப்பாடு செய்துகொள்கிறோம்.
      ‘ஒழுங்கு’ என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் ‘Discipline’ என்பதின் மூலச்சொல்லாக இருப்பது ‘To Learn’ என்பதாகும். அதாவது, ‘கற்றுக்கொள்ளல்’ என்பதே ‘ஒழுங்கு’ என்பதின் மூலச்சொல். கற்றுக்கொள்ளல் என்று சொல்லும்போது பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது என்பதாக இல்லை. தன்னிடமிருந்தே, தன் ஏதிர்வினைகள், தன் செயல்பாடுகள், தன் நடத்தை, தன் அபிப்பிராயங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக்கொள்வதையே, கற்றல் என்பது குறிப்பிடுகிறது.
     ஒழுங்கு கட்டுப்பாடு ஒருபோதும் நுண்ணறிவைப் பெற்றுத் தருவதில்லை. கவனத்துடன் பார்த்தறிதலும், மற்றும் பயமற்று சுதந்திரமாக இருப்பதும், மேலும், ஆசையின் இயல்பைப்  பற்றிய புரிதலுடன் இருப்பதுமே, நுண்ணறிவைக் கொண்டுவரும். ஆசையின் இயல்பை, அதன் கட்டமைப்பை, அதன் சக்தியை புரிந்துகொண்டு, ஆசை தோற்றுவிக்கும் கிளர்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வோடு, எப்படி எண்ணம் உள்ளே நுழைகிறது என்பதையும் நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் நுண்ணறிவை பெறுகிறீர்கள். நுண்ணறிவு என்பது உங்கள் நுண்ணறிவோ, அல்லது என் நுண்ணறிவோ அல்ல; அது, நுண்ணறிவு, அவ்வளவே.
      பயம், மானுடம்  சுமக்கும் மிகப் பெரும் பாரமாக உள்ளது. இவ்வுரையைக் கேட்ட பின்பு, பயத்திலிருந்து விடுதலை பெற நமக்கு இயலுமா? இவ்வுரையை இப்போது கேட்டீர்கள். பயத்திலிருந்து விடுபட்டீர்களா? நேர்மையாக இக்கேள்விக்குப் பதில் கூறினால், ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கும். ஏன் பயத்திலிருந்து விடுபடவில்லை? ஏன் விடுபடவில்லையென்றால், நீங்கள் உண்மையிலேயே இப்பிரச்னைக்குள் ஆழமாகச்  சென்று, படிப்படியாக ஆய்வு செய்து, ‘ஏன் விடுபடவில்லை என்பதைக்  கண்டுபிடிக்கப்  பார்க்கலாம்’ என்று முயற்சிக்கவில்லை.
 
அடுத்த பதிவில்…
A D Baalan
Editor – Kallakurichi  Guide
“எண்ணத்தின் சிக்கலான கூறுகளைப்  பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா? அதன் எளிதில் வயப்படும் தன்மை  பற்றி நீங்கள் அறிவீர்களா? எண்ணத்தின் அசாதாரணமான ஆற்றலைப் பற்றியும் குறிப்பிட்ட ஒரு வழியில் பயணிக்கக்கூடிய அதன் வேகத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரியுமா?”
                                          -ஜே கிருஷ்ணமூர்த்தி

Spread the word

Top Searches - Kallakurichi Guide

Please Comment & Share. Thanks

Comments

  • L.Perumal
    June 22, 2023 at 8:21 am

    Great Message

Add a comment