அன்பு என்றால் என்ன? JK

JK 4-Kallakurichi Guide
        அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும் நாம் பார்க்கவேண்டும். அன்பு என்ற வார்த்தை உங்களுக்கு எப்படிப் பொருள்படுகிறது? ‘அன்பு / பிரியம் என்பதற்கு நீங்கள் தரும் அர்த்தம் என்ன?’ என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், உங்கள் பதில் என்னவாயிருக்கும்? நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், ‘  இது என்ன கேள்வி? கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு பிரியம், புத்தகங்கள் படிப்பதில் எனக்குப் பிரியம், என் மனைவியின் மீது எனக்கு மிகுந்த அன்பு, நான் கடவுளை பெரிதும் விரும்புகிறேன்’ என்று விடையளிப்பீர்கள். இதெல்லாம் அன்பாகுமா? உங்கள் மனைவியின் மீது உங்களுக்கு அன்பு இருக்கிறதா? உங்கள் நண்பருடன் அன்புடனா  இருக்கிறீர்கள்?
       அன்பு என்றால் என்ன என்று நாம் ஆராயப்போகிறோம். இந்த விஷயம் மிகவும் முக்கியமானது, ஆராயப்படவேண்டியது. அன்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது. உலகச் செல்வங்கள் அனைத்தும் பெற்றவராய் நீங்கள் இருக்கலாம், தலைசிறந்த விஞ்ஞானியாகவோ, கணிதமேதையாகவோ இருக்கலாம். ஆனால் உங்களிடம் அன்பு இல்லை என்றால், பொருளேதுமற்ற வெறும் ஓடு, வாழ்க்கையை தொலைத்துவிட்ட  ஏழை.
       அன்பு என்றால் எது என்று நாம் பார்க்கப்போவதில்லை. எதுவெல்லாம் அன்பு இல்லை என்பதையே பார்ப்பதாக உள்ளோம். அதாவது, பொய்மைகளை நிராகரித்து, அதன் மூலம் உண்மையான அன்பு பற்றி தெரிந்துகொள்ளப் பார்ப்போம். எது அன்பு இல்லை என்று நிராகரிக்கரோமோ, அந்த எதிர்மறையே, நேர்மறையை காட்டிவிடும்.
        பொறாமை இருக்குமிடத்தில் அன்பு இருக்குமா? பற்றுதல், பதற்றம், வெறுப்பு போன்றவை பொறாமையில் இருக்கிறது. பொறாமை அன்பாகுமா? உங்கள் குடும்பத்திற்கு, நீங்கள் மதிக்கும் ஒரு நபருக்கு, ஒரு கருத்திற்கு, ஒரு கோட்பாட்டிற்கு, ஒரு தீர்மானத்திற்கு, நீங்கள் பற்றுதல் கொண்டவராய்  இருக்கிறீர்கள். பற்றுதல் கொண்டிருப்பதால் விளையும் தாக்கங்கள் யாவை?
        நான் மணமானவன் என்று வைத்துக்கொள்வோம். என் மனைவி மீது பற்றுதலுடன் நான் இணைத்திருக்கிறேன். இதன் பொருள் என்ன? பற்றுதல் இருக்கும் இடத்திலெல்லாம், பயம் இருக்கும். எங்கெல்லாம் பற்றுதல் இருக்கிறதோ, அங்கெல்லாம் சந்தேகம் இருக்கும். பற்றுதல் இருக்கும் இடத்தில், தனக்கே சொந்தம் என்ற உரிமை கொண்டாடுதல் இருக்கும். ஒரு இலட்சியத்தின் மீதோ, ஒரு கோட்பாட்டின் மீதோ, ஒரு நம்பிக்கையின் மீதோ, அல்லது, ஒரு நபரின் மீதோ வைக்கும் பற்றுதலானது, அப்பற்றுதலின் விளைவாகத்தோன்றும் பொறாமை, கலக்கம், வெறுப்பு மற்றும் சந்தேகம் ஆகியவற்றுடன் கூடி இருக்கையில் அவ்வுணர்ச்சி நிச்சயமாக அன்பு இல்லை.
       அன்பின் தன்மையைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, முற்றிலுமாகப்  பற்றுதலிலிருந்து விடுபட்டிருப்பது சாத்தியமாகுமா? இந்தக் கேள்வியை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏதோவொன்றுடன் பற்றுதலோடு இணைந்திருங்கள். அந்தப்  பற்றுதலின் விளைவை தயவு செய்து விழிப்புடன் நோக்குங்கள். ஒரு இலட்சியத்தின் மீது பற்று கொண்டிருந்தீர்களென்றால், அந்த இலட்சியத்தின் மேன்மையை பிறர் குறைகூறாவண்ணம், அதற்காகப் பரிந்து பேசியோ, அல்லது, உத்வேகத்துடன் அதை நிலைநிறுத்தியோ செயல்படுகிறீர்கள். அந்த தீர்மானத்தை உறுதியுடன் கொண்டிருக்கிறீர்கள் என்றால் , மேற்கொண்டு விசாரணை செய்வதற்கு, அங்கு இடமில்லை. மார்க்ஸ் மற்றும் லெனின் போன்றோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள், ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டனர். சிந்திக்கும் மற்றும் ஆராய்வதற்கான திறனை அவர்கள் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களின் கருத்தைப் பற்றி அவர்கள் ஐயுறுவதே இல்லை.
      நான் என் மனைவி மீது மிகுந்த பற்றுதல் கொண்டுள்ளேன். ஆனால், அவள் வேறொருவனோடு ஓடிப்போகலாம், வேறு ஒருவன் மீது ஆசை வைக்கலாம், அல்லது, அவள் இறந்து போகலாம். ஆக, பற்றுதலின் விளைவாக, எப்பொழுதுமே பயம், கலக்கம், சந்தேகம் ஆகியவை வருகின்றன. இவ்வுண்மையைப் பார்க்கையில், நான் வைத்த பற்றுதல், நிச்சயம் அன்பு இல்லை, அல்லவா?  எனவே எல்லாவித பற்றுதல்களிலிருந்தும் விடுபட்டிருக்க ஒருவரால் முடியுமா? நீங்கள்தான் சொல்லவேண்டும். நீங்கள் ஒருவரிடம் பற்று கொண்டிருக்கும்போது, அங்கு அன்பு இல்லை. ஏனெனில், அந்த பற்றுதலில், பயம் இருக்கிறது.
     அச்சம் என்பது அன்பாகாது. வெற்றிப்படிகளில் ஏறி சாதிக்க விரும்பும் பேரார்வம் கொண்டவர், சதா தன்னைப்  பற்றியும், தன்னுடைய சாதனைகள் பற்றியும், தனது பதவி, கௌரவம் பற்றியும் சுயநல வேட்கையுடன் இருப்பதால், அவரிடம் அன்பு இருப்பதில்லை. இத்தகைய ஒருவர், எப்படி அடுத்தவரிடம் அன்பு காட்டமுடியும்? அவருக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கலாம். ஆனாலும், அவரிடம் அன்பு இல்லை.’மிகவும் மேன்மையானதான கடவுளின் மீது அன்புடையவனாக இருக்கிறேன்’ என்று நீங்கள் சொல்கிறீர்களே, அது அன்பாகுமா? அந்தக் கடவுள், அந்த மேன்மையான பிரம்மம், உங்களின் எண்ணத்தின் விளைவாக இருக்கிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவர் கடவுள். இப்படி நான் சொல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் எனக்கு நன்றாகத் தெரியும்.
       கடவுள்  இருக்கிறார் என்ற கோட்பாட்டுக்குப் பற்றுதல் கொண்டவராக நீங்கள் இருக்கிறீர்கள். ஆனாலும், ‘உலகத்திலிருக்கும் துயரத்தை யார் உருவாக்கியது?’ என்றும் கேட்கிறீர்கள். கடவுள், உலகத்துயரத்தைப் படைக்கவில்லை, சரிதானே? அவர்தான் துயரத்தைப் படைத்தார் என்றால், அவர் ஒரு வினோதமான கடவுள், பிறர் துன்பப்படுவதில் இன்பம் காணும் விசித்திரமான கடவுள். உலகில் ஆராதிக்கப்படும் அத்தனை  கடவுள்களும், எண்ணத்தின் கண்டுபிடிப்புகளே.
      எது அன்பு என்று கண்டுபிடிக்க, துக்கம் முடிவுற வேண்டும், பற்றுதல் முடிவுற வேண்டும், அகத்தில் நம்மை கட்டிப்போட்டிருக்கும் அனைத்தும் முடிவுற வேண்டும். “நான்’ ‘எனது’ என்ற எண்ணம் இருக்கும் இடத்தில்  அன்பு இருக்காது.
       எனது இனிய நண்பர்களே, இவ்வுரையை நீங்கள் கேட்டீர்கள். ஆனாலும், இவ்வரங்கை  விட்டு  செல்கையில், இந்தவொரு மாற்றமும் இல்லாமல், நீங்கள் கொண்டிருக்கும் பற்றுதல்களுடனும், தீர்மானங்களுடனும் சேர்ந்தே செல்வீர்கள். நீங்கள் சுயவிசாரணை செய்யமாட்டீர்கள். இவ்விஷயங்களை பற்றியெல்லாம் விசாரணை செய்யச்செய்ய, வாழ்க்கை மேலும் அபாயகரமானதாக ஆகிப் போவதால், நீங்கள் ஆய்வு செய்வதில்லை.
      தியாகம் செய்வதாக இல்லாமல், இயல்பாக, எளிதாக, பல்வேறு விஷயங்களை நீங்கள் கைவிட வேண்டிவரும் என்பதால், நீங்கள் இவ்விஷயங்களைப்  பற்றிய விழிப்புணர்வு பெற முயற்சிப்பதில்லை.  பற்றுதலின் இயல்பைப்  பற்றி நீங்கள் புரிந்து கொண்டு , அதிலிருந்து விடுதலையாகிவிட்டு, உங்கள் மனைவிடம் சென்று, ‘நான் உன்னுடன் பற்றுதலோடு இல்லை’ என்று சொன்னால் என்ன நடக்கும்? – அவள், உங்கள் மீது கல்லை எறியலாம், ‘என்ன மடத்தனம்!’ என்று கத்தலாம். ஆகவே, எந்தவொரு உண்மையையும் நீங்கள் கண்டுணரும்போது, நீங்கள் முற்றிலுமாக தனித்து நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
        நீங்கள் உண்மையை கண்டுணர்கிறீர்கள் – ஆனால், உண்மையின் தரிசனம் உங்களை பயப்பட வைக்கிறது. பற்றுதலின் இயல்பைப் பற்றிய உண்மையை உள்முகமாக நீங்கள் உணர்கிறீர்கள். இருந்தபோதிலும், அதைச்சொல்லி உங்கள் மனைவியுடன் சண்டையிடுவதை நீங்கள் விரும்பவில்லை என்பதால் புறத்தே நீங்கள் பற்றுதலை  ஏற்றுக்கொள்கிறீர்கள். நாளடைவில் நீங்கள் கபடவேஷதாரியாகி விடுகிறீர்கள்.
       நுண்ணறிவின் இயல்பைத் பற்றியும் நாம் கலந்துரையாட வேண்டும். காருண்யம் அதற்கே உரிய நுண்ணறிவைக்  கொண்டிருக்கிறது. அதேபோல், அன்பும் அதற்கான நுண்ணறிவைக் கொண்டிருக்கிறது.
        நுண்ணறிவு என்றால் என்ன என்பதை பற்றி ஆராயலாம். நூல்களிலிருந்து நுண்ணறிவைப் பெறமுடியாது என்பது உறுதி. அன்பும், காருண்யமும் இருக்கும் இடத்திலெல்லாம், அவைகளுக்கான நுண்ணறிவின் அழகு மிளிர்கிறது.
         நீங்கள் ஒரு இந்துவாகவோ, கிருத்துவராகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ அல்லது பௌத்தராகவோ இருந்தால், உங்களிடம் காருண்யம் இருக்க முடியாது. எண்ணத்தின் விளைபொருளல்ல அன்பு. அன்பைப் பற்றியும், கருணைப் பற்றியும் புரிந்துகொள்வதற்கு, எதுவெல்லாம் உண்மையில் அன்பாகவும், கருணையாகவும் இல்லையோ அவற்றை முதலில் நிராகரிக்க வேண்டும். பொய்மையை, பொய்மையாக பார்ப்பது, நுண்ணறிவின் துவக்கமாகும். ஒழுங்கீனத்தை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டே இருக்காமல், அதன் இயல்பை கண்டுணர்ந்து, அதனை உடனே முடிவிற்கு கொண்டு வருவது, நுண்ணறிவாகும்.
        புத்திசாலிதனம், நுண்ணறிவாகாது, கணிதம், சரித்திரம், விஞ்ஞானம், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் அதிக விஷயஞானம் பெற்றிருத்தல் என்பது நுண்ணறிவின் செயல்பாடல்ல. அணுவை ஆராயும் விஞ்ஞானி, கருத்தூன்றலிலும், கற்பனையிலும், ஆழமாக விசாரணை செய்வதிலும், கூர்ந்து ஆராய்வதிலும், சூத்திரங்கள் மற்றும் அனுமானங்களை தொடர்ந்து வகுத்துக்கொண்டு போவதிலும் அசாதரண ஆற்றல் பெற்றிருக்கலாம். அனால், அவையெல்லாம் நுண்ணறிவல்ல.
        வாழ்வின் பூரணத்துவத்தின் செயல்பாடாக நுண்ணறிவு இருக்கிறது. நுண்ணறிவு, உங்களுடையதென்பதாகவோ, என்னுடையதென்பதாகவோ, இருப்பதில்லை. அது எந்தவொரு நாட்டிற்க்கோ, இனத்திற்கோ சொந்தமானதல்ல. ஹிந்து அன்பு / கிருத்துவ அன்பு என்றெல்லாம் அன்பு, தனிப்பட்ட ஒன்றாக இல்லாமல் பொதுவாக இருப்பதைப்போலவே, நுண்ணறிவும் பொதுவானது.
        நம் வாழ்க்கை மேற்கூறப்பட்ட விஷயங்களைச் சேர்ந்திருப்பதால், தயவு செய்து அவற்றைப் பற்றி தீர விசாரியுங்கள். நாம் துரதிர்ஷசாலிகள், சதா போராட்டத்திலும், துன்பத்திலும் உழலும் பரிதாபகரமானவர்கள். இத்தகைய நிலையை, நாம் வாழ்வின் நியதியாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால் , இவ்விஷயங்களை ஆய்வு செய்வதால், நுண்ணறிவு விழித்தெழுகிறது. நுண்ணறிவு செயல்படும்போது, அங்குச் சரியான செயல் மட்டுமே நடைபெறும்.
 
அடுத்த பதிவில் சந்திக்கலாம்…
A D Baalan
Editor – Kallakurichi  Guide  
“உங்கள் மனைவிடம் சென்று, ‘நான் உன்னுடன் பற்றுதலோடு இல்லை’ என்று சொன்னால் என்ன நடக்கும்? – அவள், உங்கள் மீது கல்லை எறியலாம், ‘என்ன மடத்தனம்!’ என்று கத்தலாம். ஆகவே, எந்தவொரு உண்மையையும் நீங்கள் கண்டுணரும்போது, நீங்கள் முற்றிலுமாக தனித்து நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்”
                                        -ஜே.கிருஷ்ணமூர்த்தி

Spread the word

Top Searches - Kallakurichi Guide

Please Comment & Share. Thanks

Spread the love

Comments

  • Comments are closed.
  • error: Content is protected !!