உறவின் இயக்கமாக வாழ்க்கை இருக்கிறது. உறவுகள் இல்லாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை. நீங்கள் ஒரு துறவியாக இருக்கலாம், சமுதாயத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்கலாம் – அப்படி இருப்பினும், நீங்களும் தொடர்புடையவரே. மனிதராய் இருந்து கொண்டு , தொடர்புகளிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் உங்கள் குழந்தைகளுடன் உறவு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும் துறவியோடும் உறவு கொண்டிருக்கிறீர்கள்.துறவியோ, தன் சொந்தக் கருத்துக்களுடன் உறவு கொண்டுள்ளார். ஆக, தொடர்புடைமை என்பது மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளது.
உறவு இல்லாமல், வாழ்க்கை இல்லை. சம்பிரதாயங்களாகவும், மனப்பதிவுகளாகவும் இருக்கும் உங்களது கடந்த காலத்துடனோ, எதிர்காலத்தைப்பற்றிய கருத்து கோட்பாடுகளுடனோ, நீங்கள் தொடர்புகொண்டு இருக்கிறீர்கள். ஆக, தொடர்புடைமை என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த உண்மையை உங்களால் பார்க்க முடிகிறதா? வார்த்தையளவிலோ அல்லது அறிவுபூர்வமாகவோ மட்டும் பார்க்காமல், மனப்பூர்வகமாக, மெய்யாக அந்த உண்மையை பார்க்கிறீர்களா?
மற்றவருடனான உங்கள் தொடர்பு எவ்வாறிருக்கிறது என்பதைப் பற்றி ஆராயலாம். அந்த உறவு, மிகவும் நெருக்கமானதோ அல்லது மேம்போக்கானதோ, எவ்வகைப்பட்டதாயினும் அத்தொடர்பைப் பற்றி பார்க்கலாம். உங்கள் தொடர்பு எப்படிப்பட்டது? குழந்தைப்பிராயத்திலிருந்தே, உளவு ரீதியாக, நீங்கள் காயப்பட்டு, புண்பட்டுப் போயிருக்கிறீர்களா – அந்தக் காயத்திலிருந்து, நீங்கள் வன்முறையை வெளிக்கொணருகிறீர்களா? மேலும் காயப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காக, நீங்கள் உங்களை மேலும் மேலும் கூண்டுக்குள் அடைத்துக் கொள்கிறீர்கள் – உளரீதியாக காயப்பட்டு போனதின் விளைவாக இது நிகழ்கிறது. பிறகு, மற்றவர்களுடனான உங்கள் தொடர்பு மிகவும் குறுகியதாக, வரையறுக்கப்பட்டதாக அமைகிறது.
எனவே, ஒருபோதும் காயப்படாமல் நீங்கள் இருக்க முடியுமா என்பதைப் பற்றி முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
காயப்பட்டு போவதற்கான மூலகாரணம் என்ன? ‘நான் காயப்பட்டுப் போனேன்’ என்னும்போது, என் தற்பெருமை காயப்பட்டது என்றாகிறது. அதன் பொருள் என்ன? ‘என் ஆசிரியர் என்னை புண்படுத்தினார், என் பெற்றோர், என் நெஞ்சை ரணப்படுத்தினார்கள்’ – நாம் அனைவருமே புண்பட்டுப் போயிருக்கிறோம், காயப்பட்டு போயிருக்கிறோம் – ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு சைகை புண்படுத்துகிறது. எது ரணப்படுகிறது? ‘நான் புண்பட்டுப் போனேன்’ என்று சொல்கிறீர்கள் இதில் காயப்பட்டுப்போன அந்த நான் என்பது எது? உங்களை பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துரு (Image) தானே அந்த நான்? உங்களை பற்றி நீங்கள் கருத்துரு கொண்டிருக்கவில்லையா?
கருத்துருக்களை உருவாக்கும் ஆற்றல், மூளைக்கு இருக்கிறது. கருத்துக்கள், நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாயைகள். உதாரணத்திற்கு, யுத்தம் பற்றிய நம் கருத்து, நாம் கொண்டிருக்கும் மாயை; நாம் யுத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்; மற்றவரை, மற்ற உயிரை, போரில் கொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். கரணம் யுத்தத்தை பற்றிய நம் கருத்துரு, அச்செயலை நியாயப்படுத்துகிறது. நமக்குக் கணக்கிலடங்கா கருத்துருக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, நாம் புண்பட்டுப்போயிருக்கிறோம் என்பது. எது காயப்பட்டுப்போனது என்பதை நாம் ஆராயலாம்.
என்னைப்பற்றி நான் நிர்மாணித்திருக்கும் கருத்துரு ஒன்றுதான் ரணமாகிவிட்டது. நான் ரொம்ப கெட்டிக்காரன், பெரிய ஆள் என்றெல்லாம் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எங்கிருந்தோ வந்து, ‘முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே’ என்று என்னைச் சொன்னால், நான் காயப்பட்டுப் போகிறேன். எங்கெல்லாம் ஒப்பீடு செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் புண்ணாகுதல் இருக்கும். என்னைவிட புத்திசாலியான, என்னைவிட திறமைமிக்க ஒருவருடன் என்னை ஒப்பிட்டுக்கொள்ளும்போது, அதாவது தராதரம் எடைபோடப்படும்போது, மனம் காயப்படுத்தல் கட்டாயம் இருக்கும். எனவேஒப்பீடுசெய்யாமல், தரத்தை அளவைகளால் நிர்ணயிக்காமல் வாழ நமக்கு சாத்தியம்தானா என்பது பற்றி விசாரணை செய்யலாம்.
சதா காலமும் நம்மை நாம் மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த ஒப்பிடுதல், பள்ளி நாட்களில் இருந்தே துவங்கி விடுகிறது. ‘நீ உன் அண்ணனைப் போல் அவவளவு நன்றாக எதையும் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தப்படும் போதே, ஒப்பீடு ஆரம்பித்துவிடுகிறது. மேலும் அது வாழ்நாள் முழுமைக்கும் தொடருகிறது.
ஒப்பீடு இல்லாமல், அளவைகள் இல்லாமல் வாழ்வது சாத்தியம்தானா? – இது மிகவும் சிக்கலான கேள்வி. ஏனென்றால், ‘மேலும் தரமான’ (better) என்ற சொல்லே, ஒரு அளவீடுதான். ‘மேலும் கூடுதலாக’ (more) என்ற சொல்லே, ஒரு அளவீடுதான். சுயமுன்னேற்றம் குறித்தவையும் அளவீடுகள்தாம். அளவீடுகள் செய்யாமல் வாழ முடியுமா? – ஒப்பிட்டுக்கொள்ளாமல் இருக்க முடியுமா என்று இக்கேள்வி பொருள்படுகிறது. ஏதுமாக ‘ஆகாதிருத்தல்’ என்பது பற்றிய விசாரணை, தியானத்தின் ஒரு பகுதியை இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ‘ஆதல்’ (becoming) என்பது ஒரு அளவீடு.
மிக நெருக்கமான உறவாக இருந்தாலும்கூட, நமக்கிடையே இருக்கும் உறவில், அளவீடுகள் இல்லாமலிருப்பது சாத்தியம்தானா? – இக்கேள்வியின் சாரம் என்னவென்றால் அளவீடுகள் இல்லாமலிருப்பதற்கு, இயந்திரம் போல் இயங்காமல், உங்கள் மூளை, மிகவும் துடிப்புடன், உறவுடன், தொடர்போடு இருக்க வேண்டும் என்பதாகும். உறவில் மனக்காயங்களை ஏற்பட்டுள்ளனவா என்பதைப் பற்றியும் ஆராய வேண்டும். அந்தக் காயம் ஒருவருக்கு பெரும் பயத்தைக் கொடுக்கிறது. தன்னைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பிக்கொண்டு உள்ளுக்குள் அவரை ஒதுங்க வைக்கிறது. அதன் காரணமாக தனித்து விடப்படுதல் ஏற்படுகிறது.
அடுத்த பதிவில்…
A D Baalan
Editor – Kallakurichi Guide